SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:
Ramanujar
Andal Nachiyar

நோற்றுச் சுவர்க்கம்


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்
தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திற ஏல் ஓர் எம்பாவாய்!

ஆண்டாள் திருவடிகளே சரணம் !! ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் !!

பொருள்: முற்பிறவியில் எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக்கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொன்னாõர்கள். நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பலின் இருப்பிடமே! கிடைத்தற்கரிய அணிகலனே! தடுமாற்றம் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா.

விளக்கம்: கோயிலில் திருவிழா என்றால், இடம் பிடிக்க முண்டியடித்து முன்னே நிற்கிறோம். இது சுயநலம். நம்மோடு மற்றவர்களும் சேர்ந்து பார்க்க வேண்டும் என அவர்களுக்கும் இடம் கொடுத்தால், அது பொதுநலம். ஆண்டாள் தான் மட்டுமின்றி, எல்லாரும் இறைவனை அடைய வேண்டும் என்று அழைக்கிறாள். புறப்படுவோமா?