SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:
Ramanujar
Andal Nachiyar

கற்றுக் கறவைக்


கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும்
குற்ற மொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருள் ஏல் ஓர் எம்பாவாய்!

ஆண்டாள் திருவடிகளே சரணம் !! ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் !!

பொருள்: கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே! புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே! நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே! இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக் கொண்டிருக்கிறாயே! அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது?

விளக்கம்: நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. தோழியோ எழுந்து வந்தபாடில்லை! நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? அவளை விட்டுவிட்டு, நீராடச் சென்றிருப்போம். ஆனால், பக்திநெறிக்கு இது அழகல்ல. பிறரை விட்டுவிட்டு, தான் மட்டும் இறைவனை அடைய முயன்றால் அது நடக்காத ஒன்று. எல்லோருமாய் இறைவனை நாட வேண்டும், அவன் புகழ் பேச வேண்டும். அப்போது தான் அவனருள் கிடைக்கும். இதனால் தான் கூட்டுப்பிரார்த்தனைக்கு மகத்துவம் அதிகமாக இருக்கிறது.