SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:
Ramanujar
Andal Nachiyar

எல்லே! இளங்கிளியே


எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன் மின் நங்கைமீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நான் தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக் கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை மாயானை பாடு ஏல் ஓர் எம்பாவாய்

ஆண்டாள் திருவடிகளே சரணம் !! ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் !!

பொருள்: ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, "கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்! இதோ வந்து விடுகிறேன், என்கிறாள். உடனே தோழிகள், உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர். அப்போது அவள், “சரி..சரி...எனக்கு பேசத்தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன்” என்கிறாள். “அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது?” என்று கடிந்து கொள்கிறார்கள். அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள். “என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா?” என்கிறாள். தோழிகள் அவளிடம், “நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய்” என்கிறார்கள்.

விளக்கம்: ஒரு பாடலை இருதரப்பார் பாடுவது போல், அவர்களின் பெயரைக் குறிப்பிடாமலே இனிமைபட பாடியிருக்கிறாள் ஆண்டாள். பெண்களுக்கு பேசக் கற்றுத்தரவா வேண்டும்! இந்தப் பாடலில் ஒரு பெண்ணை மற்ற பெண்கள் கலாய்க்கும் படியான ஒரு சூழலை நகைச்சுவை ததும்ப பாடியிருக்கிறாள். படிக்கப் படிக்க சர்க்கரைத் துண்டாய் இனிக்கும் பாடல் இது. இந்தப் பாட்டுடன் தோழியை எழுப்பும் படலம் முடிந்து விடுகிறது.