SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama:
Ramanujar
Andal Nachiyar

மார்கழித் திங்கள்


நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு, அறைபறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக் கதவம் நீக்கு ஏல் ஓர் எம்பாவாய்

ஆண்டாள் திருவடிகளே சரணம் !! ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் !!

பொருள்: எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக. மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை (சிறு முரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். “அதெல்லாம் முடியாது” என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே. மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக.

விளக்கம்: ஒருவர் ஒரு செயலைச் செய்யப் போவதாக தெரிந்த ஒருவரிடம் சொல்கிறார். ஒருவேளை, அது அவருக்கு பிடிக்காமல் இருந்தாலும் கூட, ஆரம்பத்திலேயே, “இதைச் செய்யாதே, நீ செய்யப் போவது உருப்படவா போகுது!” போன்ற அபசகுனமான வார்த்தைகளை பேசிவிடக்கூடாது. “அப்படியா?” என்று ஆரம்பித்து, செய்யப்போகும் பணியைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதன் பின், “இப்படி செய்தால் நன்றாக இருக்குமே” என்று சாந்தமாக அறிவுரை சொல்லலாம். சொற்கள் மனித வாழ்வில் மிக முக்கியமானவை என்று ஆண்டாள் இப்பாடல் மூலம் நமக்கு அறிவுறுத்துகிறாள்.