குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால்
தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய்
ஆண்டாள் திருவடிகளே சரணம் !! ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் !!
பொருள்: குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட பஞ்சு மெத்தையில், விரிந்த பூக்களைச் சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே! நீ எங்களுடன் பேசுவதற்கு வருக. மை பூசிய கண்களை உடைய நப்பின்னையே! நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்ப மனமின்றி இருக்கிறாய். காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படி செய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா?
விளக்கம்: மீண்டும் தாயாரையே கெஞ்சுகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள். அம்மா! நீயே அவனை விட மறுத்தால் நாங்கள் என்னாவோம்? அவன் அருளைப் பெற்றுத் தர வேண்டியது நீயல்லவா என்று கெஞ்சுகிறார்கள்.