வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து ஏல் ஓர் எம்பாவாய்.
ஆண்டாள் திருவடிகளே சரணம் !!
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் !!
பொருள்: அன்புத்தோழியரே! அந்த பரந்தாமனையே நம் துணைவனாக அடைய வழி செய்யும் பாவை நோன்பு விரத முறையைக் கேளுங்கள். உணவில் நெய் சேர்க்கவோ, பால் அருந்தவோ கூடாது. சூரிய உதயத்துக்கு முன்பே நீராட வேண்டும். கண்ணில் மை இடக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது தீய செயல்களை மனதால் நினைப்பதையும், தீய சொற்களை பேசுவதையும் தவிர்க்க வேண்டும். பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. ஏழைகளுக்கும், பக்தர்களுக்கும் போதுமான அளவு தர்மம் செய்ய வேண்டும்.
விளக்கம்: விரதம் இருப்பது என்றால் சும்மாவா! உணவு கட்டுப்பாடு மட்டுமல்ல! மனதையும் கட்டிப் போடச் சொல்கிறாள் ஆண்டாள். நெஞ்சத்தை நல்ல நினைவுகளாலும், வாயை நல்ல சொற்களாலும் நிறைக்க வேண்டும். இப்படி இருந்தாலே பரமன் கைக்கெட்டும் தூரத்துக்குள் வந்து விடுவான் என்கிறாள்.