முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய் செப்பமுடையாய், திறலுடையாய் செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய் செப்பன்ன, மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய் உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டு ஏல் ஓர் எம்பாவாய்
ஆண்டாள் திருவடிகளே சரணம் !! ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் !!
பொருள்: முப்பத்து மூன்றுகோடி தேவர்களுக்கு எல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக கடவுளே! எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல்மிக்கவனே! பகைவர்களுக்கு பயத்தைக் கொடுக்கும் தூயவனே! எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமி தாயே! எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடியுடன், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து, இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.
விளக்கம்: எல்லார்க்கும் முந்திய தெய்வம் கண்ணனே என்கிறாள் ஆண்டாள். உண்மைதானே! “ஆதிமூலமே” என்று கஜேந்திரன் யானை அலறியதும் கருடன் மீதேறி காற்றினும் வேகமாய் வந்து முதலையிடம் இருந்து காத்தான். பிரகலாதன் அழைத்ததும், கருடனைக் கூட எதிர்பாராமல், தூணில் இருந்தே நரசிம்மமாய் வெளிப்பட்டான் அதனால் தான் இப்படி ஒரு பட்டம் அவனுக்கு.