ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்
ஆண்டாள் திருவடிகளே சரணம் !! ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் !!
பொருள்: பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் பசுக்களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனான கண்ணனே! எழுவாயாக. வேதங்களால் போற்றப்படுபவனே! பலசாலியே! வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! எழுவாயாக! உன்னை எதிர்த்த அரசர்கள் வலிமையிழந்து, உன் வீட்டு வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியை வணங்குவதற்கு காத்திருக்கிறோம்.
விளக்கம்: கண்ணனுக்கு பயந்த மன்னர்கள், பயத்தால் அவனை வணங்கக் காத்திருந்தார்கள். இவ்வாறு இறைவனை வணங்குவதில் பயனில்லை. ஆனால், அவனது திருவடியே தஞ்சமென்று, ஆயர்குலப் பெண்கள் வந்தார்கள். இந்த ஆத்மார்த்த பக்தியையே இறைவன் விரும்புகிறான்.